சுமார் 3 தசாப்த காலமாக நடைபெற்ற உள்நாட்டு போர் சுனாமி அனர்த்தம் காரணமாக இக்கிராமம் பெரிதும் பாதிக்கப்படட பகுதியாக மருதங்கேணி பிரதேசம் உள்ளது. இக் காலப்பகுதியில் இங்கு பல கடத்தல்கள், காணாமல் போதல் மற்றும் உடல், உயிர், பொருள், வீடுகள், காணிகள், சொத்துகள், பயன்தரு மரங்கள் என்பன அழிக்கப்பட்டுள்ளன. 1990 இற்கு பிறகு இங்குள்ள மக்கள் தமது சொந்த கிராமத்தில் நிம்மதியாக வாழ முடியாமல் பல இடப்பெயர்வுகளை சந்தித்துள்ளனர். அதிலும் முக்கியமாக 1992,1996,2000,2007 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் இங்குள்ள மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
ஒவ்வொரு முறையும் இடம்பெயர்ந்து மீளவும் திரும்பும் போது மருதங்கேணி மயான காடு போலவே காட்சியழித்திருக்கிறது. இருந்தாலும் மக்கள் தமது சொந்த ஊர், வாழ்க்கை மீதுள்ள பற்றுதலினால் திரும்பவும் தமது வீடுகள் காணிகளை மீளமைத்து முடியும் தறுவாயில் திரும்பவும் அதே போன்ற இடப்பெயர்வுகள்,அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இது இயற்கையின் பருவ கால மாற்றத்தினால் ஏற்படும் அழிவுகள் போல மக்களால் தவிர்க்கப்பட முடியாமல் இருந்துள்ளது. 1990 தொடக்கம் 2010 வரையான 20 வருட காலப்பகுதியில் சுமார் 8 வருடங்கள் மட்டுமே மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர். அது கூட நிலையற்ற நிம்மதியற்ற கலக்கத்தை உண்டாக்கக்கூடிய வாழக்கையாகவே அமைந்துள்ளது.
அதே போன்று 2004ம் ஆண்டு ஏற்பட்;ட சுனாமி அனர்த்தத்தின் காரணமாக கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 750 மீற்றர் வரையான பிரதேசம் இருந்த இடம் தெரியாதவாறு முற்றாக அழிக்கப்பட்டது. இதன்போது ஏற்பட்ட உயிர் இழப்புகள் இன்று வரை இவர்களால்;; மறக்க முடியாத வடுவாக உள்ளது. 1 மாத குழந்தை தொடக்கம் சிறுவர்கள் இளைஞர் யுவதிகள் ஈறாக 80 வயது முதியவர் வரை பலர் உயிரிழந்துள்ளார்கள். அதே போன்று பொருட்கள், சொத்துக்கள் என்பவை முற்றாக அழிக்கப்பட்டன. இதன் காரணமாக இவர்கள் கடலிலும் தரையிலும் என கண்முன்னே பல இழப்புக்களை சந்தித்துள்ளனர். இதனால் பல அனாதைகள் பிள்ளைகள் ,விதவைகள் உருவாக்கப்பட்டு இன்று பெரும் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
23.09.2011 மீளக்குடியமர்த்தப்பட்ட இம் மக்களில் சின்னத்தம்பி சின்னப்பிள்ளை (வயது68) தனது கறைபடிந்த வாழ்க்கையின் பக்கங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார். இறுதி யுத்ததில் இவரது கணவர் உட்பட ஏனைய இரண்டு சந்ததியும் இன்று கணவன்மாரை இழந்து தமது அன்றாட வாழ்க்கையை கழிக்கவே பல திண்டாட்டங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். “21 வருடங்களாக நிம்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்த போதிலும் தமது சொந்த இடங்களை பார்த்த சிறிய சந்தோசம் எங்களுக்கு ஒரு புறம் இருந்தாலும் எமது அன்றாட வாழ்;கையை எப்படி கழிப்பது, பழைய வாழ்க்கையை எப்படி மீண்டும் கட்டி எழுப்புவது என்று நினைக்கும் போது ஏக்கமாக உள்ளது” என்றார்.
இன்று தமது ஒரு சிறிய கொட்டில் வீட்டுடன் சிறிய பெட்டிக்கடையை போட்டு தமது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தக்கடையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இவரும் இவருடைய மகள் கமலா (வயது48), அவருடைய மகள் சசிகலா( வயது28)அவருடைய 3 வயது குழந்தை என நான்கு பேரும் தமது வாழ்க்கையை ஓட்டி வருகின்றார்கள்.
இன்று கடற்கரையிலிருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட பிரதேசம் மக்களின் பாதுகாப்பிற்காக குடியிருப்பதற்கு முற்றாக விலக்கழிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அப்பிரதேசத்தில் எந்தவொரு மக்கள் குடியிருப்பையும் காணமுடியாது. அதற்கு பதிலாக மருதங்கேணியின் மத்தியில் உள்ள காட்டுப்பகுதி அழிக்கப்பட்டு அங்கு மக்களுக்கான குடியிருப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. “நான் எமக்கென்று ரெண்டு தடவை வீடுகட்டியும் இன்று பற்றைக்குள் கொட்டில் போட்டு இருக்க வேண்டியுள்ளது. சுனாமியும், சண்டையும் மாறி மாறி எங்கட நிம்மதி, சந்தோசம் எல்லாவற்றையும் கொண்டு போயிட்டுது. இன்று எனக்கிருக்கும் பெரிய கவலை நானும் என் பிள்ளையும் வாழ்ந்து முடிச்சிட்டம். ஆனால் என்ர பேத்தி வருங்காலத்தில் குழந்தையுடன் தனிமரமாய் நின்று எப்படி வாழ்க்கையை ஓட்டப்போகின்றாள் என்றே வேதனையாயுள்ளது” என்று கூறி மனங்குமிறி அழத்தொடங்கினார். இன்று மருத நிலத்தில் இவரைப் போன்றே பல தாய்மார் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனைக்குரிய விடயமாகும்.
ஆக்கம்- ஐஸ்வரியா.ப
மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...