Friday, January 13, 2012

அனுபவம்

0 comments
“அக்கா பசிக்குதக்கா எதாவது தாங்க” என்ற சிறுபள்ளையின் குரல் என்னை திரும்பிப் பார்க்கவைத்தது. கொட்டும் மழையில் நனைந்து போன ஆடை. என்ன நிறம் என்று கூட சொல்ல முடியவில்லை உடலுடன் ஒட்டிப்போய் ஊட்டிக் குளிரினால் நடுங்கிய படியே கைகளை நீட்டி ஏதாவது தருவாளோ என்ற ஏக்கத்தினை முகத்தில் காட்டி அன்னார்ந்து பார்த்தபடியே நின்று கொண்டிருந்தாள்.
இத்தகைய அவலத்தினை சந்திக்கும் தருணம். தருணமாயினும் அதனை பெற்றுத்தந்தது ஒரு பயணமே. வாழ்க்கையில் பயணங்கள் இயல்பானதே ஆனால் அப் பயணங்கள் வௌ;வேறு விதமானஅனுபவங்களை தரக்கூடும் அந்த வகையில் தென்னிந்தியாவிற்கான பயணம் நான் கடந்து வந்த நாட்களில் மனதினில் பதிந்து போன சிறந்த ஓர் பயணம்.





இப் பயணத்தில் பதிந்துபோன பல நினைவுகள் ஒவ்வொன்றும் கண்களை மூடி நினைக்கும் போது கண்முன்னே காட்சியாக…. இனிய நினைவுகள் ஒரு புறம் மனதினை பாதித்த தருணங்கள் ஒரு புறம் என வார்த்தைகளினால் எழுதிட முடியாத விம்பங்களாக மனதுடனே பதிந்து போயின……


இந்தியாவின் வாழ்க்கை முறை என்றதும் எம் முன் வரும் எண்ணத்தினை எம்மிடையே பதிய வைத்தவை தொலைக்காட்சிகளும், சினிமா உலகமுமே. இவற்றில் காணப்படுபவை ஒரு பாகமே என்பதை புரிய வைத்தது இப் பயணம்.
என் மனதினில் பாரதம் பற்றி இருந்த நினைவினை நான் கண்ட காட்சிகள் மாற்றி அமைத்தன. சேரிப்புறம் என்ற வார்த்தை கேட்கும் போது புரிய வில்லை அதன் அர்த்தம். ஆனால் நேரில் கண்டபோது புரிந்து கொண்டேன். சில நிமிடங்கள் கூட அப்பகுதியில் நிற்க என்னால் முடியவில்லை காரணம் எம்மை துரத்திய துர்நாற்றம். கால் வைக்கக் கூட அருவருப்பாக இருந்தது. ஆனால் அதற்குள் கையில் உணவுத ;தட்டுடன் நலிந்து போன தோற்றத்தில் உணவினை உண்ட படி எம்மை பார்த்த அந்த அம்மாவின் தோற்றம் மனதில் இன்றும் காட்சியாக உள்ளது.


தொடர்ந்தும் மீன் கழுவும் அன்னையின் அருகில் அம்மா என்று வந்துநின்றதும் அருகில் இருந்த நீரினை ஊற்றி பிள்ளையினை குளிப்பாட்டும் தாய், சூரிய ஒளி உடலில் படுவதை கூட உணர்ந்து கொள்ளாது சாலை ஓரமாய் துண்டை விரித்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒரு புறம் காலைக்கடன் கழிக்கும் சிறார்கள் என பார்க்கும் இடம் எங்கும் கவலைகளை தரும் காட்சிகள். இவை இந்தியா தானா? என்று எண்ண வைத்தது.


இரவினில் பயணிக்கும் போது தென்பட்ட காட்சிகளில் இந்தியாவில் குறிப்படத்தக்க மெரீனா கடற்கரைச்சாலை. இதில் எத்தனை மனிதர்கள் இளைப்பாறுவதற்காக நிற்பவர்களை விட தங்கும் இடமாக பாவிக்கும் மக்கள் கூட்டமே அதிகம். ஆண், பெண், சிறுவர்கள், குழந்தைகள் என அனைவரும் மெரீனா கடற்கரைச்சாலையில் படுத்துறங்கும் காட்சிகள். இவர்களுக்கு வீடுகள் இல்லையா? தெரியவில்லை இத்தகைய நிலையில் இத்தனை மக்களா? எம் நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூட தமக் கென்று ஒரு நிலையினை அடைய விரும்புவார்கள். இவர்கள் இவ்வாறு வாழ விரும்புகின்றார்களா? இல்லை இந் நிலைக்கு தள்ளப்பட்டார்களா என்ற சந்தேகம் இவர்கள் பற்றி கூறியவர்களினால் உருவாகியது.
இவை ஒரு புறம் இருக்க நாம் சென்ற சேலத்திற்கான பயணத்தின் போதும் வழியினில் கைகளில் ஊதுபத்தியினை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரின் பின்னாலும் அதன் விலையினை கூறி வாங்கிக் கொள்ளுமாறு வீதியில் அலையும் சிறுவர்கள்.


ஊட்டியில் கொட்டும் மழையிலும் நடுநடுங்க வைக்கும் குளிரிலும் பசியினால் வாடும் சின்னஞ் சிறார்கள் “அக்கா பசிக்குதக்கா ஏதாவது தாங்க” என்று என்னை தட்டியவாறே வருவதை பார்த்த போது அவர்களை தாண்டி கூட செல்ல முடிய வில்லை. கடையில் பிஸ்கட் வாங்கி கொடுத்த போது அதை தான் மட்டும் உண்ணாது அருகில் நின்ற மற்றோர் சிறுவனையும் அழைத்து பகிர்ந்து உண்ட காட்சி என்மனதை ஊடறுத்துச் சென்றது.


பள்ளி செல்லும் பருவத்தில் ஓடி விளையாடும் நேரங்களில் ஒரு வேளை உணவிற்காய் வீதிகளில் அலையும் சிறுவர்கள் இவர்களை அரவணைக்கவோ அல்லது இவர்களுக்கு உறவென்றோ யாரும் இல்லாத நிலையில் இவர்களின் எதிர்காலம் என்னாகும்? என்றால் அதற்குப் பதிலோ கேள்விக் குறிதான்.
பல்லவனின் புகழினை பரப்பி நிற்கும் மாமல்ல புரத்திலும் குறவர்கள் இனத்தை சேர்ந்த பெண்களும் சிறுவர்களும் கையினில் மாலைகளை வைத்த படி வயிற்றுப் பசியினை போக்க வெயிலிலும் மழையிலும் நின்று விற்கும் நிலையினை பார்க்கவே கொடுமையானது. ஒடுக்கப்பட்ட இனமாக பார்க்கும் அவ்வூர் மக்களால் ஒருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு ஒடுங்கியே விட்டனர். கழுத்தில் ஒரு துணியினை கட்டி பைகளை கழுத்தில் மாட்டுவது போல் பச்சிளம் குழந்தையை மாட்டிக் கொண்டு சுடும் வெயிலிலும் மாலைகளை விற்கும் குறத்திகள். கையினில் தடியினை வைத்து அச்சுறுத்தி வேலை வாங்கும் சாதாரண ஆண்கள் இவர்களை பார்த்ததும் இவர்களை ஒடுக்கிய சமூகத்தின் மேல் கோபம் தான் வந்தது.


இவற்றிலும் ஒரு ஆச்சரியம் என்னவெனில் கையினில் மாலையுடன் விற்பதற்காக நின்ற குறத்தியின் உதடுகளில் இருந்து வந்த வார்த்தைகள். தமிழையே சரியாக பேச முடியாது “சாமியோ” என்று கூப்பிட்டவர்களிடம் இருந்து இன்று ஆங்கிலம் வருகின்றது. இதை நினைத்து மகிழ்வதா? இல்லை இவர்களின் நிலைகண்டு கவலைப்படுவதா? தெரியவில்லை.. இவ்வாறு சென்ற இடம் எங்கும் திரும்பிப் பார்த்த தருணங்கள் அனைத்திலும் இத்தகைய அவலமே. இவர்களை கவணிக்க இவர்களின் நிலையினை தீர்க்க இங்குள்ள அரசாங்கம் என்ன செய்தது என்றால் யாருக்கும் தெரிய வில்லை. சொன்னவர்களோ “எங்கள் நாட்டு பிரச்சனைகளே இவ்வளவு இருக்க பக்கத்து ஊர்பிரச்சனையை தீர்க்க முயல்வார்கள்” என்று கூறினர் சிலர்.
என் மனதில் இவர்கள் பற்றி தோன்றிய கேள்விக்கு பதில் எதும் கிடைக்காமலேயே என் பயணம் நிறைவினைக் கண்டது. ஆனாலும் என் கேள்விகளோ நிறைவடையவில்லை. எனது கேள்விகளை ஒருமித்து வினாவினால் “இவை அனைத்திற்கும் தீர்வினை கொடுக்க வேண்டியவர்கள் என்ன செய்கின்றார்கள்?” என்பதே.


தென்னிந்தியாவிற்கான பயணம் எனக்கு பல்வேறு அனுபவங்களை பெற்றுத் தந்திருப்பினும் அங்கு என் மனதினை பாதித்த விடயம் இதுவே. இதுவரை என் பயணங்கள் ஏதோ ஒரு விதத்தினில் ஒரு பார்வையினையே கொடுத்தது. ஆனால் இத் தென்னிந்திய பயணம் வாழ்வின் நிலைகள் பல்வேறு கோணங்கள் என்பதை கற்றுத் தந்தது. சிறப்பான வாழ்வு அனைவரும் வாழ்ந்திட முடியாது என்பதை இலகுவில் புரியவைத்து விட்டது இப் பயணம்.


ஆக்கம் - ஜெ.மரீன்

மனிதர்கள் உயிர்க்க வேண்டும்...

Leave a Reply