தமிழ் தலைவன் மு .கருணாநிதி -05
திராவிட முன்னேற்றக்கழம் திராவிடஸ்தான் பிரிவினை கோரிக்கையுடன் இந்தித் திணிப்பு எதிர்ப்புபையும் தமது போராட்டங்காளாக முன்னிலைப்படுத்திய திராவிட முன்னேற்றக்கழகம் பின்னர் பிரிவனைக் கோரிக்கையை கைவிட்டது. 1963ஆம் ஆண்டு இந்திய சீனப் போர் நடைபெற்ற போது அரசியலமைப்பின் 16வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆதன்படி பிரிவினை தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தப் பின்னணியில் தி.மு.க தனது திராவிடஸ்தான் பிரிவினை கோரிக்கையை கைவிட்டது.
இருப்பினும் தனது ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு நிலைப்பாட்டை தொடர்ந்தது பேணி வந்தது. 1963ஆம் ஆண்டு அலுவல்மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைந்தது. பெரும்பான்மையினரால் பேசப்படும் மொழியே அரச மொழியாக வேண்டும் என்று அப்போது வாதிடப்பட்டது. இந்தியப்பாராளுமன்றத்தில் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. சி.என். அண்ணாத்துரை சுiவாயான, தீர்க்கமான விவாதங்களை முன்வைத்தார்.. இந்தி பெரும்பான்மையினரால் பேசப்படுகிறது என்ற காரணத்துக்காக அந்த மொழியை அரசமொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார். அப்போது இந்தியத் தேசியப்பறவையாக மயில் அறிவிக்கப்பட்டிருந்தது. பெரும்பான்மை என்ற கூற்றுக்கு அண்ணாதுரை பதிலுரைத்தார்,
"எண்ணிக்கைகளால் முடிவுகள் எடுக்கப்படுமானால். இந்தியாவின் தேசியப் பறவை மயிலாக இருக்காது காகமாகத்தான் இருக்கும்” என்றார்.
இவ்வாறு ஒவ்வொரு விடயத்திலும் அண்ணாத்துரையால் செதுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக்கழகம் கருணாநிதியன் தலைமையில் 1972 பிளவுகட்டது. அது தொண்டர்கள் மத்தியிலும் தலைவர்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் நீக்குவது என்ற தீர்மானம் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானது.
கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் தீயைத் தொட்டு சூடுவாங்கிக் கொண்டார் கருணாநிதி;. தன்னையுறியாமல் ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்தார். அதனால் ஆட்சியைப் பிடிக்க தவித்தார்.
புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து நீக்கிவிட்டார்கள் என்ற செய்தி தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது. கருணாநிதியின் பொன்மொழிகளில் ஒன்று ‘அதிருப்தியாளர்கள் வளரவளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்தி செல்லும் தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான்." ஏன்பதாகும்.
கருணாநிதிக்கெதிரான அதிர்ப்தியாளர்கள் எம். ஜி.ஆர் பின்னால் ஒன்று திரண்டார்கள்.
ஏம்.ஜி. ஆரை விலக்கிய செய்தி கேட்டு தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
அப்போது தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்கள் தங்களுக்குத் தாங்களே தளபதிகளாக மாறினர். புரட்சித் தலைவரை விலக்கிய தி.மு.க. தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கொடிகளை இறக்கினர். ‘தாமரை’ உருவம் பொறித்த கொடிகளை ஏற்றினர். ஓர் ஊரில் நிகழ்ந்திருந்த இந்த நிகழ்ச்சி பல ஊர்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ள தோழர்கள் தாமரைக் கொடிகளை ஏற்றி வைத்துப் ‘புரட்சித் தலைவர் வாழ்க!’ என்று முழக்கமிட்டார்கள்.அதே நேரம்தோழர்கள் வாகனங்களில் சென்னையை நோக்கிப் படையெடுத்து வரத்தொடங்கினார்கள்; சமுத்திரமாகப் பெருகினார்கள்.
ஒரே நாளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை நகரத்தில் திரண்டனர். எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். சென்னை அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலடசக்கண்க்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார் எம்.ஜி.ஆர். அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது.
இந்தச் சம்பவம் ‘மக்கள் யார் பக்கம்’ என்பதை பறைசாற்றும் பலப்பரீட்சையாகப் பார்க்கப்பட்டது. தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மகள் கடலைப் பார்த்து எம்.ஜி.ஆர். ஆனந்தக் கண்ணீர் உகுந்தார். அப்போது அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானவர்கள், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.
தமிழக அரசியலில் புதிய சகாப்தம் தொடங்கிய நாள் 1972ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி அன்று தான் திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். முழுமையாக விலக்கப்பட்டார். எம்.ஜி.ஆரை கட்சியை விட்டு நீக்கும் தீர்மானத்தை நாவலர் நெடுஞ்செழியன் கொண்டு வர, அதை முதலில் தி.மு.க செயற்குழு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து தி.மு.க பொதுக்குழு கூடி நிறைவேற்றியதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார்.
"தி.மு.க.,செயற்குழு. எவ்வளவோ வாய்ப்பளித்தும், எம்.ஜி.ஆர்.,அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. கழக பொதுச்செயலாளர் நாவலர் அவர்களால் எம்.ஜி.ஆர்.,மீது கழக சட்ட திட்ட விதியின்படி எடுத்துள்ள நடவடிக்கையை இந்த செயற்குழு ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்த தீர்மானத்தை பொதுக்குழுவிற்கு பரிந்துரை செய்கிறது” என்பதே அந்த தீர்மானம்.
எம்.ஜி.ஆரை நீக்குவது தொடர்பான தீர்மானம் தி.மு.க பொதுக்குழுவில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அந்தக் கூட்டத்தில் மொத்தம் உள்ள 310 பேரில் 277 பேர் கலந்து கொண்டனர். மற்றவர்கள் வராததற்குக் காரணம், அவர்கள் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் என்பது. கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே எம்.ஜி.ஆர் நீக்கத்தை ஆதரித்துப் பேசினர், வாக்களித்தனர்.பொதுக்குழுவில், தீர்மானப்படி இன்று முதல் எம்.ஜி.ஆர்., திமு.கவை விட்டு முற்றிலும் நீக்கப்பட்டு விட்டார். இனி சமரசத்திற்கு இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தது.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதும் தமிழகமே கொந்தளித்தது. எம்.ஜி.ஆரின் ரசிகர்களும், அவருடைய ஆதரவாளர்களாக இருந்த தி.மு.கவினரும் பெருவாரியாக திரண்டு வந்து எம்.ஜி.ஆர். பின் நின்றனர். தி.மு.க உடைந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது.
கருணாநிதி போட்ட கணக்கு தவறியது. தீயை மிதித்தது போலானது. குச்சியைக் குச்சியால் சந்திக்க முற்பட்டது தோல்வியடைந்தது.
ஏம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து நீக்கப்பட்ட போது எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே தி.மு.க சோர்ந்த பலரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும் . முன்னர் இந்திராகாந்தி காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட போது நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டது, அப்படியே தான் எம்.ஜி. ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலித்தது. கிளர்ச்சி ஏற்பட்டது.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தத்தை கருணாநிதியே உருவாக்கினார் எனலாம். அது துவங்கியவுடனேயே தமிழக அளவில் பெரிதாக வளர்ந்தது, மிகச் சுலபமாக நடந்தது. இங்கு, வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது தான் பொருந்தும். அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை' என்று காட்டவும் கலைஞர்; கருணாநிதி பல்வேறு திசையில் பிரயாணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று. அந்தத் தருணம், கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை தொலைத்தார்.
1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தி.மு.கவை தோற்கடித்து வெற்றி பெற்றது. ஏம.ஜி.ஆர் தொடர்ந்து மூன்று தடவைகள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார். ஏம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதியால் ஆட்சியைப்பிடிக்க முடியவில்லை.
எம்.ஜி.ஆர். தமிழகத்தைப் பத்தாண்டுகள் ஆட்சி செய்தார். அதில் மூன்றாண்டுகள் நடைபிணமாக இருந்தார். 1987-ல் எம்.ஜி.ஆர் இறந்து போனார்.
‘எம்.ஜி.ஆர்: தமிழகத்தின் இடி அமீன்’, ஒரு ‘சேடிஸ்ட்’ – குரூர இன்பம் காண்பவர், ‘துக்ளக்’கைப் போல திடீர் திடீரென்று முடிவுகளை மாற்றிக்கொள்ளும் கோமாளி என்று பத்தாண்டுகளாக கருணாநிதி கட்சியின் பத்திரிகைகள் எழுதி வந்தன. இதற்குப் பொருத்தமாக கத்தியை கடித்துக் கொண்டு பைத்தியம் போல முழித்துச் சிரிக்கும் எம்.ஜி.ஆரின் சினிமா படம் ஒன்றையும் தவறாது வெளியிட்டு வந்தன.
ஏம்.ஜி. ஆர் இறப்பின் பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று கருணாநிதி மூன்றாவது முறையாக முதலமைச்சரானார்.
இவ்வாறு பல கடினமான சூழ்நிலைகளையெல்லாம் தாண்டி திராவிட முன்னேற்றக்கழத்தை கருணாநிதி என்ற ஆளுமை கட்டிக்காத்து அறுபது ஆண்டுகளாக வளர்த்தெடுத்திருக்கிறது. ஆட்சியின் நீட்சியில் அண்ணாவை கடந்தும், ஆயுள் நீட்சியில் பெரியாரை தாண்டி 94 வயது வரை வாழ்ந்து தமிழகத்தின் சரித்திரத்தில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்த கருணாநிதி இப்போது சரித்திரமாகியிருக்கிறார்.
- தேவநாயகம் தேவானந்த் -
(தொடரும்)