Thursday, February 16, 2012

என் பயண அனுபவம் தந்த சுகமும் துக்கமும்…

0 comments
கடந்த மாதம் தென்னிந்தியாவிற்கு ஊடகப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தோம். ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயணம் ஊடக அறிவினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்டதாகும். ஓவ்வொரு பயணமும் ஏதாவது ஒரு அனுபவத்தை சொல்லிக் கொண்டே இருக்கும்.




இந்தப் பயணத்தின் போது சென்னையின் கீழ்த்தட்டு மக்களின் வாழ்வு என் கண்ணுக்குள் விழுந்தது. சென்னை வீதிகள் விஸ்தாரமானதாக மாற்றமடைந்து பல வருடங்கள் கடந்த விட்டன. வீதிகளில் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பாதாசாரிகளுக்கென தனியே வீதிக்கடவைகளும் வீதியில் ஒரு பகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அதைத்தவிர போக்குவரத்தினை இலகுவாக்க சுரங்கவாசல் காணப்படுகின்றது.

மெரினா கடற்கரையை அண்டியியில் சேரிப்புற மக்கள் தம் வாழ்க்கையை குறுகிய இடத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். வானமே கூiர் கடல் மண்ணே பாய். அதிகாலையில் யாரும் எழுப்பத் தேவையிராது தட்டி எழுப்புவதற்கு சூரியனும் பனித்துளிகளும் தம் போட்டியை தொடங்கிவிடும். நம்மூர் திருவிழாக்களில் கச்சான் கொட்டில்களின் அளவு எல்லோருக்கும் தெரியும். அந்த அளவு இடமே அவர்களது வீடு.

காலையில் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற மண்ணைத் தட்டி விட்டுவிட்டு தம் வேலையை பார்க்கின்றார்கள். ஒருநாள் காலையில் உடற்பயிற்சி செய்வதற்காக கடற்கரையை நோக்கிச் சென்றோம். அந்தப் பரந்த கடலில் தங்களுடைய இயற்கைக் கடன்களை கழித்துக் கொண்டிருந்தார்கள். அதைவிட இன்னொன்று என்னைப் பாதித்த சம்பவம் என்னவென்றால் மழைத்தூறல் வந்து மண்ணை நனைக்கின்றது. அசாதாரணமாக அதை அருகே அள்ளிக் கொட்டி விட்டு கீழுள்ள நனையாத மண்ணில் ஒருவர் உறங்குகின்றார். இப்படியும் அவர்களால் வாழ முடியுமோ என்று எண்ணத் தோன்றியது.

சென்னையில் கூவம் ஆறு நாற்றத்தை எங்கும் பரவியபடி ஓடிக் கொண்ருக்கின்றது. அதன் பக்கத்திலே சேரிப்புறங்கள். எங்கள் குழு பயிற்சிக்காக பம்பிங்ரேசன் என்ற சேரிப்புறத்திற்கு சென்றது. அங்கு வடிகால்கள் உடைந்து ஓடுவதற்கு இடமில்லாமல் அப்படியே தேங்கி நிற்கின்றது. கொசுக்களோடு தான் சிறுபிள்ளைகள் விளையாடுகின்றனர் எண்ணுமளவிற்கு கொசுக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால் இக்குடியிருப்பிற்கு மிக அருகிலேயே சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் செயலகம் இருக்கின்றது.

சேரிப்புறம் எங்கள் நாட்டில் கிடையாது. அவர்களைப் போன்ற ஒரு வாழ்க்கையை நாங்கள் அனுபவித்ததுமில்லை. சொந்த வீடில்லாமல் நான்கு தடுப்புச் சுவர்களை வீடுகளாக கொண்டு மக்கள் வாழ்கிறார்கள். தம் சொந்த மக்கள் இப்படி வாழ இடமளிக்கின்றது இந்தியா. இந்த நிலையில் இலங்கைக்கு வீட்டுத்திட்ட உதவி செய்கின்றது. இதை நினைக்கும் போது ரொம்பவும் வேதனையாக இருந்தது. 

இந்தியா கல்லிலே கலை வண்ணம் கண்ட நாடு! இப்பயணத்தின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. குகைகளை குடைந்து அநுராதபுரத்தில் காசியப்ப மன்னன் ஓவியம் தீட்டி வைத்தான். அது இன்றும் அழியாப்புகழ் பெற்று விளங்குகின்றது. அவ் ஓவியங்கள் சிதைவுற்ற வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் மலைகளைக் குடைந்து கற்களிலேயே உருவங்களை செதுக்கி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள் அந்தக் காலத்துச் சிற்பிகள்.

ஒரு சிற்பம் என்றால் ஏதோ இலகுவாக செய்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஆனால் கோயிலையே தொடராக கற்களிலேயே செதுக்கி இருக்கின்றார்கள். கற்கள் என்றும் அதை வெறுமனே சொல்லிவிட முடியாது. தற்போது எங்கள் வீடுகளில் வழுக்கும் தன்மையுடைய மாபிள்கள் பொருத்துவது போன்ற அந்தக் காலத்திலேயே வெண்பளிங்குக் கருங்கற்களை பாவித்திருக்கிறார்கள். இந்த தொழில்நுட்ப அறிவை வியப்பதைத் தவிர வேறில்லை.

கோவை வழியாக சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். பேரூர் என்ற ஊரில் பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றோம். எல்லா கோயில்களிலும் இருப்பதைப் போன்று தானே இங்கும் கட்டியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே சிற்பங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென என் நண்பி ‘‘எல்லாரும் இங்க வந்து பாருங்கோ’’ என உற்சாகமாக கூவினாள். என்னவென்று ஆர்வத்துடன் பார்த்தால் பிரதான மண்டத்தின் மேலே ஓவியங்கள் இருந்தன. நடுவே ஓர் சிவலிங்கம்! அதை எந்தத் திசையில் நின்ற பார்த்தாலும் எம்மை நோக்கி பார்க்கும். எனக்கு ஆச்சரியமாகிப் போனது. என்னைப் போலவே பலரும் கண்களை சுழற்றி திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மோனாலிசா ஓவியம் நாம் அழுதால் அழும்; சிரித்தால் சிரிக்கும் என்ற சொல்வார்கள். அந்த ஓவியத்தின் திறமை அது. ஆனால் அவ் ஓவியத்தின் மூலத்தில் மட்டுமே தெளிவாக பிரதிபலிப்பைக் காட்டும். எனக்கு சிவலிங்க ஓவியத்தினை பார்த்ததும் பிரமிப்பாக இருந்தது. சின்ன வயசில் நாங்கள் எங்க போனாலும் கூட வாற நிலாவைப் பார்த்து ஆசைப்படுவோமே அந்த மாதிரி ஒரு பிரமிப்பு!

சிவலிங்க ஓவியத்தை தவிர எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் கனக சபா மண்டபமும் அம்மாதிரியான வடிவில் வரையப்பட்டிருக்கின்றது. சிவலிங்கத்தின் ஒவியம் கடந்த வருடம் அதுவும் இலங்கை ஒவியர் ஒருவராலேயே வரையப்பட்டிருக்கின்றது என்று கோயில் பூசகர் சொன்னார். நம் நாட்டில் கோயில்களில் சிற்பவேலைஇ ஒவியத்திற்காக இந்தியக் கலைஞர்கள் வேண்டும் என்று அடம்பிடிக்கும் இங்குள்ள ஆலய தர்மகர்த்தாக்கள் கவனிக்க வேண்டும். அதைத்தவிர அந்த ஓவியர் அக்கோயில்  கருவறைக்குள்ளேயும் ஓவியங்களை  வரைந்துள்ளனர். இந்திய ஓவியங்களை விட தமிழக அரசு அவரிற்கு மட்டுமே அந்த அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.

இந்தியக் கோயில்களின் கருவறைக்குள் பெண்கள் நுழைந்து வழிபடுகிறார்கள். ஆண்கள் மேலாடையுடனேயே கோயிலுக்குள் நுழைகிறார்கள். பார்த்தவுடன் ஆச்சரியமாகிப் போனதுடன் எம் கோயில்களில் இந்த நிலைமை ஏற்பட்டால் என்ன நிகழும் என்று தோன்றியது. எம்மூர் கோயில்களில் ‘ஆண்கள் மேலாடையுடன் வரக் கூடாது’ என்று எழுதியே வைத்திருக்கிறார்கள். அது வித்தியாசமானதாக இருந்தது.

வேலூர் கோட்டை பார்க்கச் சென்ற போது கோட்டைக்குள்ளே ஒரு சிறிய கடை இருந்தது. ஆதன் பக்கத்திலே கண்தெரியாத வயது முதிர்ந்த காலத்திலும் கண் பார்வையற்றிருந்தாலும் உழைத்துக் கொண்டிருக்கின்றார். அவரோடு பேசிய சில நிமிசத்துளிகள் மனதை நெகிழச் செய்தது.
 இந்தியப் பயணத்திலேயே அந்தக் கணம் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தியது.

சுறுசுறுப்பாக யாரையும் எதிர்பார்க்காது சொந்தக் காலில் நிற்கின்றார் அந்த பார்வையற்ற முதிய பெண்மணி. என்னால் அவரைவிட சிறப்பாக பணியாற்ற முடியுமே அதற்காக இதுவரைக்கும் என்ன செய்திருக்கின்றேன் என்பதை நினைத்த போது சங்கடமாக இருந்தது. இனிவரும் காலத்தில் தவறுகளை களைந்து துடிப்புடன் செயலாற்ற வேண்டும் என உறுதி பூண்டிருக்கின்றேன். இந்தியப் பயணம் என்னை மாற்றத்திற்குள்ளாக்கிய பயணமாக மாறிவிட்டது.

ஆக்கம்- மு.கௌசிகா

Leave a Reply