வலிகளோடு ஏக்கங்களை சுமந்தபடி இருக்கின்றது மீள்குடியேறிய மக்கள் விழிகள்! சோந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததால் அப்பா என்ற ஒரு ஆறுதல். வேதனைகளை நெஞ்சுக்குள் மறைத்துக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள்.
நாகர்கோவில் மேற்குப் பிரதேச மக்கள் கடந்த வருடம் யூலை மாதம் தம் சொந்த இடம் திரும்பியிருக்கின்றார்கள். அவ்விடத்திற்கு களப்பயிற்சிக்காக சென்ற போது ஒரு குடும்பத்தினரை சந்தித்தேன்.
சந்தியோ சூரியமதி! முப்பது வயதேயான குடும்பப் பெண். விழிகளில் சூரியனையும் காணவில்லை: சந்திரனையும் காணவில்லை. அமாவாசைக் காடாய் அச்சம் நிறைந்த விழிகளுடன் தன் வாழ்க்கைப் பதிவுகளை என்னிடம் இறக்கி வைத்தார்.
இவர் மூன்று பிள்ளைகளுக்கு அம்மா. கணவன் யுத்தகாலத்தில் காணாமல் போய் விட்டார். அன்றிலிருந்து பிறந்த வீட்டுவாசம் தான்! “வீட்டில ரீ.வி இல்லையென்டு வாங்கிறதுக்குப் போனவர் திரும்பி வரவே இல்லை. எல்லாரும் அவர் செத்திட்டார் என்டு சொல்லிச்சினம். நான் நம்பேல்லை. நான் கண்ணால பார்த்தா தானே நம்ப முடியும். சின்ன வயசிலேயே இழந்துட்டன் என்டு… அவர் போகேக்க என்ர கடைசி கலைவாணி பிறந்து மூணு நாள் தான்” என்று விக்கிவிக்கி அழுகின்றார்.
தரம் மூன்று படிக்கும் தனுசன் படிக்க வேண்டியது நான்காம் ஆண்டில். ஆனால் யுத்த காலத்தில் அவனது படிப்பு வீணாகிப் போய்விட்டது. கலைவாணி தலம் இரண்டில் படிக்கிறாள். இடையில் சூரியதீபன். இவன் தான் பிரச்சினைக்குரியவன். பாடசாலைக்குப் போவதில்லை.
சூரியதீபனுக்கு அவனின் அப்பா ஞாபகம். அதனால் அவனது மூளையில் தாக்கம் என்கின்றார் அவன் தாயார். முனவியாதியா என்று தெரியவில்லை. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறவர்களிடம் தினமும் அர்ச்சனைகள் வாங்காமல் இருப்பதில்லை. தினம்தினம் சண்டைகள்.
“விசரியின்ர பிள்ளையென்டு சனங்கள் திட்டுதுகள். அப்பன் இருந்தா இப்படி விடுவாரே. அண்டைக்கும் இப்படித் தான். சாமம் போல கடலுக்குள்ள விழப் போட்டான்” என்கிறார் தாய்.
பள்ளிக்கூடத்தில் அடிதடி. தாறுமாறான சிறுபிள்ளைத்தனப் பேச்சுக்கள். இதனால் பள்ளியில் இருந்து இவனை நீக்கி விட்டார்கள்.
தனக்கும் சின்ன வயசில் மலேரியா நோயம் வந்து மூலவருத்தம் இருக்கின்றது என்கிறார். வாய்க்குள் இருந்து இரத்தம் இன்றும் வந்து கொண்டு தான் இருக்கின்றது. சத்தான மா போக்ற பொருட்கள் கூட வாங்க வசதி இல்லை.
“எங்களுக்கு என்ன கஷ்ரம் வந்தாலும் பரவாயில்லை. நான் கேட்கிறது என்ர சூரியதீபனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை தான். எல்லாரும் சொல்லுறாங்கள். எங்கேயோ ஒரு கொஸ்ரல் இருக்குதாம். அங்க கொண்டு போய் விடட்டாம் என்டுறாங்கள். எனக்கு அந்த இடங்கள் தெரியுமே: தெரியாது தானே” என்கிறார் கண்ணீரைத் துடைத்தபடி!
யுத்தத்தின் பிடியில் இருந்து தப்பித்து வந்தவர்கள் இன்று மனம் எனும் அரக்கனிடம் இருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கின்றார்கள். சூரியதீபனை சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்த்து விடுங்கோ என்று தவிக்கின்றார் இந்த தாய். இந்த சூரியதீபனைப் போல இன்னும் எத்தனை சிறுவர்களோ தெரியவில்லை.
ஆக்கம் - கௌசி.மு