Thursday, February 16, 2012

கொழும்பில் ஊடகப் பயிற்சிப் பயணம்

0 comments

அனுபவங்கள் தான் மனிதனை செம்மையாக்குகின்றது. எம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் எம்மை தூக்கி நிறுத்துகின்றன. வெற்றி தோல்வியை சமதளத்தில் வைத்து எம்மையே பூர்த்தி செய்ய வைக்கின்றது.

நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் முழுநேர இதழியல் கற்கைநெறி பயிலும் மாணவி. பரீட்சை முடிந்தவுடனேயே எமக்கான உள்ளகப் பயிற்சிப் பயணம் கொழும்பை நோக்கி ஆரம்பித்தது.



சுற்றுலா என்றாலே எல்லோருக்கும் ஆனந்தமே கொடி கட்டிப் பறக்கும். இதுவோர் கல்விச் சுற்றலாவாக இருந்தது என்னை ஆனந்தத்தின் உச்சத்திற்கே கொண்டு போய் விட்டிருந்தது. என் நண்பர்களுடன் சில நாட்கள் தங்கலாமல்லவா! செப்ரம்பர் 06 இரவு 7.30மணிக்கு யாழிலிருந்து முப்பது மாணவர்களையும் ஆசிரியர் இயக்குநர் ஆகியோரை தாங்கி கொழும்பு நோக்கி பஸ் புறப்பட்டது.

மறுநாள் காலை 6.30மணிக்கு கொழும்புக்கு வந்தடைந்த நாம் எமது முதல் உள்ளகப் பயிற்சிப் பயணத்தை இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆரம்பித்தோம். காலை உணவினை ஓடும் பஸ்ஸிற்குள்ளே உட்கொண்டோம். அது எனக்கு புதிய அனுபவம்!

 பாராளுமன்றம்! பெயர் பொருத்தமில்லை தான். ஏனெனில் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்தமையால்  பாராளுமன்றம் எனக் கூறினர். தற்போது ஒரு நாடு மட்டும் தானே ஆள்கின்றது? எனவே நாடாளுமன்றம் எனக் கூறுவது தானே பொருத்தம். சரி நமக்கு இப்பொதென்ன வந்திச்சு! பாராளுமன்றம் எனச் சொல்லப்படும் வளாகத்திற்குள்ளே நுழைவோம்.

நேரடியாக பாராளுமன்றத்திற்குள்ளே நுழைய முடியாது. பலத்த கட்டுக்காவல்களை கடந்தே செல்ல முடியும். வெளியே ஒரு இடத்தில் ஆண், பெண் என இருபாலாரையும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக உடல் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதன்பின் பாராளுமன்றத்திற்குரிய வாகனத்தில் ஏறி மூன்று நிமிடங்கள் பிரயாணம் செய்தோம். வளாகத்தின் மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்ட ஏரி, நான் தான் இதற்குப் பாதுகாப்பு என்பது போல் கம்பீரமாக ஓடிக் கொண்டிருந்தது.

காலை பத்து மணிக்கு பாராளுமன்றத்தினுள் நுழைந்நு வாதப்பிரதிவாதங்கள் நடக்கும் சபா மண்டபத்திற்குள் நுழைந்தோம். அங்குள்ள நடைமுறைகள் கருத்துக்களை பாராளுமன்ற தமிழ்மொழி பெயர்ப்பாளர் விளக்கினார். அப்பாராளுமன்றம் ஜப்பான் அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்டதாம். மேற்கூரை தங்கமும் அலுமினியமும் கலந்து அமைக்கப்பட்டுள்ளதால் ஒளியை வாரி இறைத்துக் கொண்டபடி தானிருக்கின்றன. ஒரு சுற்று மின்விளக்குகள் மேல் நோக்கி பரவுமாறு அமைக்கப்பட்டிருக்கின்றது. மண்டபத்தின் நான்கு பக்கமும் பதினான்கு கம்பங்களில் முன்னர் ஆட்சி செய்தவர்களின் கொடிகள் காட்சியளித்துக் கொண்டிருந்தன. தங்கமுலாம் பூசப்பட்டிருந்த அக்கம்பங்களின் மேல் ஒளிக்கற்றைகள் பட்டுத் தெறித்து மேற்கூரையில் விழுந்து அச்சபா மண்டபத்தையே சொர்க்காபுரி ஆக்கிக் கொண்டிருந்தன.

மொழிபெயர்ப்பாளரது உதவியுடன் அனைத்து விளக்கங்களையும் பெறக் கூடியதாக இருந்தது. எந்தெந்த ஆசனங்களில் எங்கெங்கு யார் இருப்பார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். மூன்று மாதங்களுக்கொரு தடவை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தர வேண்டும் என்ற தகவலையும் சொன்னார். நாம் சென்றிருந்த சமயத்தில் சபை கூடவில்லை என்றாலும் மதியம் அவை கூடுமென்று தகவல் தந்தார்கள். வந்தது தான் வந்து விட்டோம்; அதையும் பார்த்து விடலாம் என்ற ஆர்வத்துடன் கேட்க அனுமதியும் கிடைத்தது. முன்பு ஆட்சி புரிந்தவர்களது சிம்மாசனங்கள; தொப்பி என்பவற்றை பார்க்கவும் முடிந்தது.

மதிய உணவினை வெளியே சென்று உட்கொண்டு விட்டு மீண்டும் பாராளுமன்றத்திற்குள் சென்றோம். ஒரு மணியிருக்கும் சபாநாயகருக்குப் பதிலாக பிரதிசபாநாயகர் வருகை தந்தார். அவருக்கு முன்பே ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் வந்திருந்தனர். சபா மண்டபத்திற்குள் செங்கோல் கொண்டு வரப்பட்டது. மேற்குப் பக்கத்திலிருந்து கிழக்குப் பக்கத்திலிருக்கும் சபாநாயகரது ஆசனத்தின் கீழுள்ள மேசையொன்றில் ஆளும்கட்சியினர் புறமாக கைப்பிடி அமையுமாறு வைக்கப்பட்டது. அன்றைய சபை அமர்வில் இரு கட்சியிலும் சுமார் ஏழோ எட்டுப் பேரோ தான் இருந்தனர். அவர்களிலும் சிலர் தமக்குள்ளே விவாதித்துக் கொண்டிருக்க ஒருவர் எழும்பி தன்னுடைய விவாதத்தை தொடர்ந்து கொண்டிருந்தார்.

எமக்கோ நித்திராதேவி கண்களைத் தழுவிக் கொண்டிருந்தாள். ஏனெனில் யாழிலிருந்து வந்தவுடனேயே ஆயத்தமாகி நேரே இங்கு வந்தமையால் எம் எல்லோரிலும் நித்திராதேவி ரொம்ப பாசம் வைத்திருந்தாள் போலும். பாராளுமன்றத்தை அவமதிப்பது தொடர்பாக எந்த ஒரு செயல்களையும் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதில் காலுக்கு மேல் கால் போடக் கூடாது. முக்கியமாக நித்திரை கொள்ளக் கூடாதென்று சொல்லியிருந்தார்கள். எம்மில் ஒருத்தி தூங்கி வழிந்து கொண்டிருந்ததை கண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் பல தடவைகள் தட்டித் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தார். எங்களக்கு ஒரே சிரிப்பத் தான். எனினும் அங்கு செய்தி சேகரிப்பதற்காக வந்திருந்த செய்தியாளாரில் ஒருவரே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததும் எம்மவர் முகத்தில் சிரிப்பு மழை பொழியக் காரணமாயிற்று.
எனக்குத் தெரிந்து ஆளும்கட்சியில் வாசுதேவ நாயக்க மேர்வின், சில்வா போன்றோரும் எதிர்க்கட்சியில் சுரேஷ் பிரேமச்சந்திரன், விஜயகலா மகேஸ்வரன் போன்றோரும் அங்கிருந்தனர். எம்முடைய இந்த அவமதிப்பினை தாங்க முடியாமல் தான் என்னவோ பொறுப்பாக வந்த கொழும்பு இதழியல் கல்லூரி விரிவுரையாளர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். ஒரு மணித்தியாலம் வரை அன்றைய பாராளுமன்ற அமர்வினை பார்வையிட்டோம். அன்றைய அமர்வில் எம்.பிக்களை விட பார்வையாளர்கள், ஊடகவியலாளர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

மாலை ஆறு மணிக்கு நாம் தங்கியிருந்த கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டோம். ‘கற்றது தமிழும் சட்டமும்’ என்ற தலைப்பில் உரையாற்றினர். அதன்பின்னர் அனைவரும்; ஓன்றுகூடி அன்றைய நாட்களில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற நடைமுறைகளைப் பற்றி கலந்துரையாடினோம். சிறு விளையாட்டு ஒன்றினையும் அந்த இரவில் விளையாடியது புதிய அனுபவமாக இருந்தது. அவ்விளையாட்டு எங்களது மனத்தை ஒருநிலைப்படுத்துதலுக்காக மேற்கொள்ளப்பட்டது மிகவும் பயனுடையதாக இருந்தது.

மறுநாள் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவினர் நடத்திய தேசிய ஊடக மாநாட்டிற்கு சென்றோம். இரு நாட்கள் நடந்த மாநாட்டின் இறுதிநாளிலேயே கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. Self-Regulation in the media பற்றிய மாநாட்டில் ஊடகவியலாளர் பலரும் உரையாற்றினர். எம் சக மாணவி மரீன் எழுப்பிய வினாவிற்கும் பதிலளித்தனர். ஒரு ஊடகவியலாளர் பொதுமக்களுக்கு மட்டுமே பொறுப்புக் கூற வேண்டுமே தவிர மற்றவர்களுக்கல்ல! ஆனால் நடப்பதைப் பார்த்தால் அது சந்தேகம் தான். ஊடகத்திற்கும் ஒழுக்கக்கோவை என்பது தேவையாக இருக்கின்றது. இருப்பினும் சில சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் நன்மை கருதி  ஒழுக்கக் கோவையில் இருந்து மீறவும் முடியும். ஆச்சு ஊடகத்திற்கு மட்டுமே ஒழுக்கக்கோவை இருக்கின்றது. இலத்திரனியல் ஊடகத்திற்கும் ஒழுக்கக்கோவையினை உருவாக்குவதற்கு தூண்ட வேண்டும் என்றனர்.

மதிய உணவினை அங்கேயே முடித்துக் கொண்ட நாம் ஒரு மணியளவில் உயர்கல்வி அமைச்சர் திஸாநாயக்கவினை சந்தித்தோம். அவருடனான சந்திப்பின் போது கேட்பதற்காக பல வினாக்களை தயாரித்து வைத்திருந்தோம். எனினும் நாம் என்ன கேட்க வேண்டுமென்று நினைத்தோமோ அதைவிட அவரே பல தகவல்களை தந்தார். அவருடனான சந்திப்பு சிறிதளவு நேரமே நீடித்தது. ஊடகத்துறையில் எப்போதும் கேள்வி கேட்பவன் ஊடகவியலாளனாகவே இருக்க வேண்டும். அவனை வாயடைத்து விட்டு தகவல் வழங்குபவனே கதைக்கக் கூடாது என்பது இச்சம்பவத்தில் இருந்து எனக்கு புலனாகியது.

மாலை நான்கு மணி! இளங்காற்று முகத்தில் மோத கால்களை நனைத்திட காலிமுகத்திடல் கடற்கரைக்குச் சென்றோம். என்னைப் போன்று பலரும் அப்போது தான் அங்கு முதன்முதலாக வந்திருந்தனர். பொதுவாக எல்லா கடற்கரையிலும் நீர், அலை, கரை, வானம் , அந்தி சாயும் நேரத்தில் மனதை மயக்கும் சூரியன் என காட்சியளிக்கும். சில மக்கள் அங்கங்கே இருப்பார்கள். ஆனால் இக்கடற்கரையை சுற்றி நிறுவனங்கள், மக்கள் என பெருவாரியாக இருக்கின்றன. நகரத்தின் பரபரப்பிற்கு நடுவே தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வருகின்றனர் அந்த மக்கள். அலைகளுக்குள்ளே கால்களை விடவும் ஆசை ஆனால் பயமுமாய் குழந்தைகள் கரையிலேயே இருந்து மணல் வீடுகளைக் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். இனிமையான மாலைப் பொழுது மகிழ்ச்சியாக கழிந்தது.

செப்ரம்பர் 09ஆம் திகதி அரிய மரபுச் சின்னங்களுடன் அன்றைய பொழுது புலர்ந்தது. எம்மில் பதினைந்து பேர் கொண்ட குழு தேசிய அருங்காட்சியகத்திற்குச் சென்றிருந்தோம். மதியம் பன்னிரண்டு மணி வரை அருங்காட்சியகத்திற்குள்ளே சுற்றித் திரிந்து கொண்டிருந்தோம். இலங்கையின் புராதன மரபுச் சின்னங்களில் பெருமளவினை பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. சிறு வயதிலேயே பாடத்திட்டங்களில் படித்த கேள்விப்பட்ட விடயங்களை நேரில் பார்த்து புரியக் கூடியதாக இருந்தது.

ஒரு நாள் மதியம் நாம் தங்கியிருந்த இடத்திற்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தோம். ஒரு பெண் வீதியால் செல்பவர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு கையில் குழந்தையை ஏந்தி மறுகையை நீட்டி கேட்டுக் கொண்டிருந்தாள். என்ன எங்கட ஊரில தான் இப்பிடித் தான் எண்டு பார்த்தால் இங்கேயும் இப்பிடியா என்று தான் மனதுக்குள் எண்ணத் தோன்றியது. எங்கட தலைநகர் பிரமாண்டமான கட்டடங்களையும் ஆடம்பரமான வாழ்க்கை முறையையும் கொண்டது. ஆனால் அந்த பிரமாண்டத்தில் வாழும் பெருமளவானோர்களில் ஒருவர் கூட அந்தப் பெண்ணுக்கு எதையும் கொடுக்க முன்வரவில்லை. வேலை பார்க்க மாட்டார்கள். யாருடையோ குழந்தையை வைத்துக் கொண்டு மற்றவர்களது அனுதாபத்தை பெற்றுத் தான் சீவியம் நடத்த வேண்டுமோ என எண்ணபவர்களும் இருக்கிறார்கள் தான். அவ்விதம் நினைப்பதில் தவறெதுவும் கிடையாது. ஏனெனில் தன் கையே தனக்கு உதவி என்று பழமொழியே இருக்கிறது.

எல்லோருக்கும் கைகள் முன்நோக்கித் தான் இருக்கும். ஆனால் அந்தப் பெண்ணின் வலது கை பின்புறம் பார்த்தபடி இருந்தது. அந்த நிலை எந்தளவிற்கு பரிதாபகரமானது. பார்த்தவுடன் ஒருகணம் என் மனம் அதிர்ந்து போனது. என்ன செய்வதென்றும் புரியவில்லை. வீதியில் சிக்னல் போடப்பட்டிருந்ததால் அதைப் பார்க்க முடிந்தது. இருந்தும் எதுவும் உதவி செய்ய முடியாமல் போய்விட்டது கவலையாக இருந்தது.

அந்தப் பெண்ணினுடைய தோற்றம் கண்ணுக்கு முன் தோன்றி மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. கொழும்பில் நின்ற எட்டு நாட்களும் பயன்மிக்கதாக அமைந்தது. சில பொழுதுகள் இனிமையாக இன்பமாக கழிய சில பொழுதுகள் தூக்கத்துடனும் கழிந்தது.


ஆக்கம்- மு.கௌசிகா

Leave a Reply