யாழ்ப்பாணம் வலிவடக்கு பிரதேசத்தில், தெல்லிப்பழை உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த கொல்லங்கலட்டி பிரதேசத்தில் இருந்து 1990இல் இடம் பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் 2011 ஆவணிமாதம் மீள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தற்போழுது குறைந்தளவான மக்களே அடிப்படை வசதிகள் ஏதும் அற்ற நிலையில் வசித்து வருகின்றனர். அரசாங்கத்தினால் மீள் குடியமர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் எவ்வித உதவிகளும் இப்பகுதிமக்களுக்கு சரிவர வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
21 ஆண்டுகளுக்கு பின் தம் சொந்த மண்ணிற்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது இருப்பினும் எம் மண்ணின் வளம் யுத்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகள் எல்லாம் மிகவும் சேதமடைந்து காணப்படுகின்றது. அதனை மீண்டும் திருத்தி அமைத்து நாங்கள் தங்குவதற்கு பலநாட்கள் தேவை என்றும் ஓய்வுபெற்ற பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் திரு.சண்முகம் இரத்தினசிங்கம் தெரிவித்தார்.
அத்துடன் இப்பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட இடத்தில் கண்ணிவேடியொன்று குப்பை எரிக்கும் போது வெடித்ததாகவும் அதனால் ஒருவர் காயப்பட்டதாகவும் தெரிவித்தனர். இத்தகைய நிலையில் தாம் பாதுகாப்புடன் இருக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.
தம் வாழ்விடங்களில் புனரமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்களுக்கு அரசாங்கத்தினதும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் உதவிகள் உடனடியாக தேவைப்படுகின்றன என தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், தம் வாழ்விடங்களில் முழுமையாக மீளக்குடியமர 2013 வரையான காலப்பகுதி தேவைப்படும் என்றும் தெரிவித்தனர்.
தாங்கள் தமது சொந்தஇடத்தில் நிரந்தரமாக இருக்கமுடியாத நிலை காணப்பட்டாலும் இடையிடையே வந்து சிறிது சிறிதாக துப்பரவு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும். விறகுகள் வெட்டிச்செல்வாதாகவும் கூறினர். இருப்பினும் தாம் தமது சொந்த இடங்களில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
யுத்தம் முடிவடைந்து தமது சொந்த மண்ணிற்கு 21 ஆண்டுகளின் பின் மீளக்குடியேறியுள்ள கொல்லங்கலட்டி பிரதேச மக்கள் இவ்வாறான சிரமங்களை தொடர்ந்தும் எதிர்நோக்கி வருகின்றனர்.
ஆக்கம்- மறீன்.ஜெ