Thursday, February 16, 2012

தமிழனுக்கு விசை கொடுத்த தப்பு இசை

0 comments



வேலை செய்த களைப்பை மறக்கும் கருவியாக அந்தக்கால மக்கள் ஆடல்பாடல்களை நம்பினர்;. அந்தக் காலத்திலெல்லாம் வானொலி, தொலைக்காட்சி, இணையம் என்று பொழுதுபோக்கு கருவிகள் இருந்ததில்லை. கடின உழைப்பும் ஓய்விற்கென கிராமியக்கலைகளுமே அவர்களது மூச்சாக இருந்தது. மகிழ்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட நாட்டார் கலைகள் ஒடுக்கப்பட்ட மக்களிற்கு விசை கொடுக்கும் கருவியாகவும் செயற்பட்டு வந்தது. அதிலே தப்பு இசையினை ஒடுக்கப்பட்ட மக்கள் தம்முடைய குரலாக, சக்தியாக உலகிற்கு வெளிக்கொணர்ந்தனர்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தினரது ஓங்குசக்தியாக இருந்த தப்பு(பறை) போர்ப்பறையாகவும் பயன்படுத்தப்பட்டது. தப்பு கருவியை அடிக்கும் போது மனதிலே வீரம் குடிகொள்ளும். தப்பு எனும் இசைக்கருவியை கையில் எடுத்து கால்களுக்கும் அசைவு கொடுத்தனர். உடலுக்குள் ஒரு விசை:  மனதுக்குள் வீரப்பசை பெருக்கெடுக்க தம் கருத்தினை எடுத்துச் சொன்னார்கள். தப்பு பிறந்தது இப்படித்தான்!

தப்பு கருவி மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்டவடிவமான சட்டகத்தில் புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட பசையினைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி ஆக்கப்பட்டது. தப்பு கருவியினை  இசைக்க இருவிதமான  குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது. இடதுகையிலுள்ள குச்சி ‘சிம்புகுச்சி’  என்றும் வலதுகையிலுள்ள குச்சி ‘அடிகுச்சி’ என்றும் அழைக்கப்படும். சுpம்புகுச்சி நீண்ட தடடையானதாகவும் அடிகுச்சி குட்டையாக பருத்ததாகவும் அமைந்திருக்கும்.
கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டைக்குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்ப்புறத்தில் இருந்து அடிப்பர். இடதுகையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியை பிடித்துக் கொண்டு மேல் பகுதியில்  இருந்து அடிப்பர்.

அடிகுச்சியால் தப்பின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. தப்பினைப் பிடித்துள்ள இடதுகையில் வைத்துள்ள சிம்புகுச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகளாகும். இவற்றினை மாற்றி மாற்றி அடிப்பதன் மூலம் புதிய மெட்டுக்கள், சொற்கட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் தனித்தனி அடியென வைத்திருக்கின்றார்கள். சப்பரத்தடி, டப்பா அடி, பாடல் அடி, சினிமா அடி, ஜாய்ண்ட் அடி, மருள் அடி, சாமி சாட்டுதல், மாரடித்தல், வாழ்த்து அடி என ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ப தாளங்கள் மாறுகின்றன. எனினும் இசைக்கப்படும் இசைக்கருவி ஒன்றுதான்!
இந்திய நாட்டில் கலைகளுக்குப் பஞ்சமில்லை. அதிலும் இலங்கையை விட அங்கு நாட்டார்கலைகள் ஒவ்வொரு கிராமந்தோறும் வழக்கத்தில் இருந்து வந்துள்ளன. எனினும் காலமாற்றத்திற்கேற்ப கலைகளும் அழிவடைந்த நிலையை எய்திவிட்டன. அழிவடைந்து சென்று கொண்டிருப்பவற்றை தூக்கி நிறுத்த ஆர்வம் மிக்க கலைஞர்களாலேயே முடியும். அப்படியான கலைஞர்கள் தப்பாட்டத்தினை தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திண்டுக்கல்,  மதுரை போன்ற இடங்களில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
முன்பெல்லாம் கோயில் நிகழ்வுகள், வாழ்வியல் சடங்கு, அரசியல் பிரச்சினை போன்றவற்றிற்கு இசைக்கப்பட்ட தப்பு, தற்போது கலை வாழ வேண்டும் என்ற வெறியோடு செயற்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் டிசம்ப் 05! மக்களிடையே சிறு ஆரவாரம். பத்திரிகைகளும் செவிவழிச் செய்திகளும் ‘தப்பு’ எனும் சொல்லைப் பற்றி கதைபேசின. தப்பு! யார் தப்புச் செய்து விட்டார்கள் என்று வியாக்கியானம் கேட்க ஆரம்பித்தவர்கள் காதுகளில் “தப்பாட்டம் ஆடுகிறார்களாம். அதுவும் இந்தியாவில் இருந்து வந்த ஆடலரசு செய்யிறாராம்” என ஒலித்தன.       என்னவென்று பார்க்க சிறு கூட்டம். அசுவாரசியமற்றுப் போனது பல கூட்டங்கள்.
செயல்திறன் அரங்க இயக்கத்தின் ஒத்துழைப்புடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தென்னிந்தி நாட்டார் கலைகளின் ஆற்றுகை நிகழ்வில் தப்பு இசை முக்கியப்படுத்தப்பட்டிருந்தது. தென்னியந்தியக் கலைஞர் வேணுகோபாலின் நெறிப்படுத்தலின் கீழ் தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக் குச்சியாட்டம, கும்மியாட்டம், ஆதிவாசி நடனம் போன்ற  மருவி வருகின்ற ஆட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
பார்வையாளர்களாக வந்திருந்த இளைஞர்கள் கரகோஷம் செய்தது மட்டுமன்றி  மேடையில் ஆடப்பட்ட ஆடல்களுக்கேற்ப தாமும் ஆடி, கலைஞர்கள் ஆடும் போது ஒலிப்பிய இசைச்சொற்களையும் வாயசைத்து தம்முடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
முன்னைய காலத்தில் தாசி குலத்தவர்களால் மட்டும் பரதநாட்டியம் ஆடப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ எல்லோராலும் ஆடப்படுகின்றது. அதுபோல இந்த தப்பாட்டமும் ஒடுக்கப்பட்ட மக்களது என்றில்லாமல் இளைய சமுதாயத்தினரால் ஆடப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பலாலி ஆசிரியர் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, இருபாலை ஆசிரியர் கலாசாலை, இராமநாதன் கல்லூரி ஆகிய ஜந்து இடங்கள் நடத்தப்பட்ட இந்நிகழ்வைப் பார்வையிட்ட ஆசிரிய மாணவர்கள் தமக்கும் இந்த வகை ஆடல்களை கற்றுத் தரும்படி  கோரினர். அவர்களின் அந்த ஆர்வத்தைக் கண்ணுற்ற வேணுகோபாலும் அவர்களுக்கு தானறிந்த கலையை கற்றுத் தந்திருக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் இந்தக் கலைகள் மறைந்து போவதற்கு சாத்தியப்பாடுகள் இனிமேல் வரப்போவதில்லை. இத்தனை மாணவர்கள் பழகிய இக்கலைக்கு அழிவில்லை.
தப்பு இனிவரும் காலத்தில் ஒடுங்கிய தப்பாக இருக்கப் போவதில்லை. பரந்து விரிந்ததாக எங்கும் கிராமிய மணம் பரப்பும் கருவியாக, ஓங்கி ஒலிக்கும் குரலாக, சக்தியாக இருக்கப் போகின்றது. ‘தப்பினைச’; சுட்டிக் காட்டும் இந்த ‘தப்பு இசையின்’  குரல் என்றும் மறைவதற்கில்லை.  

 ஆக்கம் - கௌசி.மு


Leave a Reply