யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஈழத்தவர் குறும்பட விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் 27.10.2012 வியாழக்கிழமை பயிற்சி மையத்தில் இப் பயிற்சி மையத்தின் இயக்குனர் தே.தேவானந் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவநாதன், சிறப்பு விருந்தினராக முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொன்.பாலசுந்தரம்பிள்ளை போன்றோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் முதல் அமர்வில் “திரைப்படம் மற்றும் குறுந்திரைப்படம் எனும் தலைப்பில் எழுத்தாளர் குப்பிளான் சண்முகம் அவர்களின் கருத்துரை இடம் பெற்றதுடன் தண்ணீர், சலனம், மறுபக்கம், அவசரம், பொறி, ஹத்தால், பச்சை மண் சுட்ட மண், எங்கள் சுறுட்டு, கால் போன்ற குறுந்திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இரண்டாம் நாள் அமர்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் விமல்சுவாமிநாதன் மற்றும் முன்னாள் கலைப்பீடாதிபதி சிவச்சந்திரன் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் “கைத்தொலைபேசி குறும்படம்” எனும் தலைப்பில் ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய இயக்குனர் தே.தேவானந், “மக்கள் தொடர்பாடல் ஊடகமாக குறும்படங்கள்” எனும் தலைப்பில் கவிஞர் சோ.பத்மநாதன் கருத்துரைகளை வழங்கினர். இதில் இதுவே போதும், இழந்தோம், ஊமைமொழிகள், சாசனம், கனவு ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களின் இயக்கத்தில் உருவான குறும்படங்களும் விடியுமா, வாழ்க்கையே போராட்டம், பேரன் பேர்த்தி, எதுமட்டும், வட்டம், வெள்ளைப்பூக்கள், இடைவளி, பூமாலை, ஊனம் ஆகிய குறுந்திரைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையை நிகழ்த்திய கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவநாதன் தான் இந்த குறும்பட நிகழ்விற்கு வருகை தந்ததிற்கு மகிழ்ச்சியடைவதாகவும் வர்த்தக நிலையங்களின் மையத்தில் ஓர் உயிர்ப்புடையதொன்றாக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் அமைந்துள்ளது எனவும் கூறினார்.
மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர் உரையை நிகழ்த்திய முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொன்.பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் உரையாற்றும் போது ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் தொழில்சார் ஊடகவியளாளர்களை உருவாக்குவதில் திறமையுடன் செயற்படுவதாகவும் இங்கு கற்கும் மாணவர்கள் அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம், புதிய ஊடகம் போன்றவற்றில் பயிற்சிகளை பெற்று வெளியேறுகின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் கூறினார்.
மேலும் இந் நிகழ்வில் குறும்படத் தயாரிப்பாளர்கள், ஆர்வலர்கள், பயிற்சி மைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.